×

சட்ட நகல் எரிப்பு, டார்ச் லைட் பேரணி, சத்யகிரகம், முழு அடைப்பு.. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து அசாமில் போராட்டங்கள் வெடிப்பு!!

டிஸ்பூர் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து அசாம் மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு அமல்படுத்தப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. அசாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் இன்று காலை முதல் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. பெரும்பாலான நகரங்களில் கடைகள் , வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று முழுவதும் டார்ச் லைட் பேரணி, சத்யகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டங்களால் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சட்ட நகல் எரிப்பு, டார்ச் லைட் பேரணி, சத்யகிரகம், முழு அடைப்பு.. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து அசாமில் போராட்டங்கள் வெடிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Assam ,Dinakaran ,
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் – பஞ்சாப் இன்று மோதல்